ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி..
****************************************************
மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 14 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி 15.08.2018 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கே. விநாயகம் தலைமை வகித்தார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார்.
‘ஆலந்தோப்பு’ என்னும் தலைப்பில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கையூட்டும் கருத்துகளை தமிழ் இலக்கியங்களிலிருந்தும் கதைகளில் இருந்தும் எடுத்துக்காட்டிப் பேசினார்.
முன்னதாக ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாநிலந் தழுவிய அளவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிந்தனை அரங்க மேடையில் உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கப்பட்டது.
விழாவில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாப் பணிகளில் பங்களிப்புச் செலுத்திய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
புத்தகங்களை வாங்கிச் செல்லவும் சிந்தனை அரங்க நிகழ்வில் கலந்து கொள்ளவும் வந்திருந்த பல்லாயிரம் பேருக்கும் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா 2019 ஆகஸ்ட் 2 முதல் 13 வரை நடைபெறும் என்ற தகவலுடன் கூடிய நன்றி அறிவிப்புத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
நிறைவாக, மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலாளர் ந. அன்பரசு நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்குப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்புரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.
|